Pages

Sunday, 25 May 2014

விடுபட்டுப்போன வார்த்தைகள்



தஞ்சையின் தூசிவாழ் சந்துகள்


தஞ்சையின் தூசிவாழ் சந்துகள்


தஞ்சையின் தூசிவாழ் சந்துகள்

இருக்கக்கூடும் எங்கேனுமோர் மூலையில்
எதிர்த்தட்டுப்படும் தஞ்சையின் தூசிவாழ் சந்துகளின் இடுக்கிலமைந்த  படிவைத்த ராயர் வீட்டு சமையல் கூடத்தில் அம்மியாய்
ராஜராஜ சோழேச்வரம் கண்ட குஞ்சர மல்லப்பெருந்தச்சன்
உச்சபட்ச உயிர்ப்புடன் உருவம் பொளித்தபின்
வைக்க முடியாமல் விட்டுப்போன கருங்கல்.

இருக்கக்கூடும் இன்னும் வாழ்வுடன்
வாயினில் ஒழுகும் எச்சிலுடன் எனைப்பார்த்து சிரிக்கும்
மழலையின் அம்மா அள்ளிப்போட்டு சேகரம் செய்து வைத்த காதறுந்த மஞ்சள் பையினுள் ஒரு மரப்பாச்சியாய்
பத்மநாபபுர அரண்மனை இழைத்த ஆசாரி
தன் ஆசைக்கு செய்துபார்த்த உருவம்

இருக்கக்கூடும் இதுவரை சாலை காணாத ஏதோவொரு கோவைப்பகுதி மலை கிராமத்து அரசு பள்ளிக்கூட மணியாக
அன்றைய மைய சென்னையில்
ஓட விட்ட ட்ராம்  வண்டி பாதை ரயில் அமைக்க திட்டமிட்டு எடுத்து வந்து இடாமல் போன தண்டவாளத்துண்டு

இருக்கக்கூடும் ஒரு பழைய மரக்கள்ளிப் பெட்டியுள் சேர்த்து வைத்த
ஒன்னாவது நோட்டுப்புத்தகத்தில் ஓர் ஓரக்கிருக்கலாய்
பிறழ்வெண்களுக்கும் புதிர்களுக்கும் மேல் ராமனுஜன்
கண்டடைந்த கணித எல்லை

ஆதலினால் தேடுவீராக

யார் கண்டது ஏதோவொரு மகாகவிஞன் உன்மத்த நிலையோடு சொன்னதில் விடுபட்டுப்போன வார்த்தைகள்
எப்போதேனும் தட்டுப்படலாம் நான் இங்கு எழுதும் இந்த வரிகளில்.

வந்து விழுந்துவிட்டவைகளுக்கும் விடுபட்டவைகளுக்கும் இடைப்பட்ட வார்தைக்கணங்களில்தான்
கவிதை உயிர் பெறுகிறது