Sunday, 25 May 2014

விடுபட்டுப்போன வார்த்தைகள்



தஞ்சையின் தூசிவாழ் சந்துகள்


தஞ்சையின் தூசிவாழ் சந்துகள்


தஞ்சையின் தூசிவாழ் சந்துகள்

இருக்கக்கூடும் எங்கேனுமோர் மூலையில்
எதிர்த்தட்டுப்படும் தஞ்சையின் தூசிவாழ் சந்துகளின் இடுக்கிலமைந்த  படிவைத்த ராயர் வீட்டு சமையல் கூடத்தில் அம்மியாய்
ராஜராஜ சோழேச்வரம் கண்ட குஞ்சர மல்லப்பெருந்தச்சன்
உச்சபட்ச உயிர்ப்புடன் உருவம் பொளித்தபின்
வைக்க முடியாமல் விட்டுப்போன கருங்கல்.

இருக்கக்கூடும் இன்னும் வாழ்வுடன்
வாயினில் ஒழுகும் எச்சிலுடன் எனைப்பார்த்து சிரிக்கும்
மழலையின் அம்மா அள்ளிப்போட்டு சேகரம் செய்து வைத்த காதறுந்த மஞ்சள் பையினுள் ஒரு மரப்பாச்சியாய்
பத்மநாபபுர அரண்மனை இழைத்த ஆசாரி
தன் ஆசைக்கு செய்துபார்த்த உருவம்

இருக்கக்கூடும் இதுவரை சாலை காணாத ஏதோவொரு கோவைப்பகுதி மலை கிராமத்து அரசு பள்ளிக்கூட மணியாக
அன்றைய மைய சென்னையில்
ஓட விட்ட ட்ராம்  வண்டி பாதை ரயில் அமைக்க திட்டமிட்டு எடுத்து வந்து இடாமல் போன தண்டவாளத்துண்டு

இருக்கக்கூடும் ஒரு பழைய மரக்கள்ளிப் பெட்டியுள் சேர்த்து வைத்த
ஒன்னாவது நோட்டுப்புத்தகத்தில் ஓர் ஓரக்கிருக்கலாய்
பிறழ்வெண்களுக்கும் புதிர்களுக்கும் மேல் ராமனுஜன்
கண்டடைந்த கணித எல்லை

ஆதலினால் தேடுவீராக

யார் கண்டது ஏதோவொரு மகாகவிஞன் உன்மத்த நிலையோடு சொன்னதில் விடுபட்டுப்போன வார்த்தைகள்
எப்போதேனும் தட்டுப்படலாம் நான் இங்கு எழுதும் இந்த வரிகளில்.

வந்து விழுந்துவிட்டவைகளுக்கும் விடுபட்டவைகளுக்கும் இடைப்பட்ட வார்தைக்கணங்களில்தான்
கவிதை உயிர் பெறுகிறது

Thursday, 4 April 2013

கட்டாததை எப்படி அவிழ்ப்பது? (அ) மதுரைலேர்ந்து எப்ப வந்த?

திரு. K. G. ஜவர்லால் அவர்களது இந்த பகிர்வை இப்போதுதான் படித்தேன்.

நல்ல பகிர்வு.

கீழே உள்ளது தெளிவாக புரிய வேண்டுமென்றால் சிரமம் பார்க்காமல் ஒருமுறை அங்கு சென்று படித்துவிட்டு வந்துவிடவும். இல்லை போத்திக்கிட்டும் படுத்துக்கலாம் அப்படிங்கறவங்க அப்படியே தொடரலாம்.

 இந்த பதிவைப் படித்தபின் எனது கல்லூரி கால நினைவொன்று மீண்டது.
தேனி என்றழைக்கப்படும் நண்பன் வெங்கடேசனிடம், ஒரு திங்கள் கிழமை காலையில் அதி முக்கியமாக நான் கேட்ட  கேள்வி

"டேய் மாப்பு, எப்படா மதுரைலேர்ந்து வந்த?"

வெங்கடேசன் : "லேய், நான் போகலடா".

நான் : "டேய்....கலக்குற....எப்புட்றா போகாமயே மதுரைலேர்ந்து வந்த?#&*!?"

வெங்கடேசன் : "லேய், @#$%^&*()!?<>)(*&^%$#@!:"}{[]||"  (ரொம்ப நக்கலும் எகத்தாளமும் தொனிக்க ஒரு உவமானம் / டயலாக் வாங்கிக் கட்டிக்கொண்டேன்).

பி. கு : அந்த வெங்கடேசன் தற்போது தேனி நகராட்சியில் பொறியாளராக பணியாற்றுகிறா(ர்)ன்.

போத்திக்கிட்டு படுத்துக்கிரவங்களுக்காக :-
தொடர்புடைய இடுகை : கட்டாததை எப்படி அவிழ்ப்பது?

Sunday, 3 February 2013

தேடலும் பயணமும் கவிதையும்

All the travel & Search
தேடலும் பயணமும் கவிதையும்

எல்லா தேடல்களையும் பயணமாகவும்
எல்லா பயணங்ளையும் தேடலாகவும் கொள்வது
கவித்துவமாக எளிதாக உள்ளது.

Tuesday, 25 December 2012

தனித்து விடப்பட்டது இந்த விசி அல்ல

 
Traces
தடங்கள்

வந்தமர்ந்தவர்களும், எழுந்து சென்றவர்களும் மட்டுமே இல்லை என்று காட்டும் எதிரிலிருக்கும் தடங்களின் அகல நீளங்கள்.

எல்லோரும் சென்ற பின்னும் தனித்து விடப்பட்டதென்னவோ இந்த விசி  அல்ல.

Friday, 21 December 2012

இக்கரைப் பச்சை


எப்போதுமே இக்கரைக்கு அக்கரை பச்சையாக இருப்பதில்லை
இக்கரைப் பச்சை

எல்லா நேரத்திலும் இக்கரைக்கு அக்கரை பச்சையாக இருப்பதில்லை

Monday, 19 November 2012

அது சரி / தலை சாய்க்காமல் பார்க்கவும்



அது சரி, பல கோணல்களுக்கும், வளைவுகளுக்கும் காரணங்கள் புரிபடுவதில்லை, எவ்வளவுதான் தலை சாய்த்துப்பார்த்தாலும்.

Sunday, 11 November 2012

சட்டகத்தின் இடுக்குகள் கடக்கும் எல்லையற்ற பெருவெளி

உள்ளேயா?, வெளியேயா?


உள்ளேயா?, வெளியேயா?

எல்லையில்லா பெருவெளி கேட்கும் குரல்கள் எல்லாம் ஏனோ
சட்டகத்தின் அளவை சற்று பெரிது படுத்தித்தா என்றே கேட்பதாய் தோன்றுகிறது
எல்லா தடுப்புகளுக்கு  இடையிலேயும் தெரிவதென்னவோ எல்லையற்ற பெருவெளிதான்.