Tuesday, 28 August 2012

பயணத்தின் நோக்கம்


Objective Travel
பயணத்தின் நோக்கம்
அழகான காக்கை
எதைத்தேடி போகுதிப்போது
ஒருவேளை சென்று தேடி கண்டடைந்தபின் நம்மிடம் சொல்லுமோ
பயணத்தின் நோக்கம்
பயணம் மட்டுமேவாக இருக்கவும் முடியும் போல தோணுது

Monday, 27 August 2012

Russy Mody (ரஸ்சி மோடி அல்லது ரூசி மோடி) - 5

ரஸ்ஸி அவர்கள் சேர்ந்த 1939 ம் வருடத்திலிருந்த இளம் டிஸ்கோ அப்போது 90 களின் முற்பகுதியில் நன்று வளர்ந்து கிளை பரப்பிய ஒரு நிறுவனமாக ஆகியிருந்தது.

நிறுவனத்துடன் இணைந்து 50 ஆன்டுகள் ஆகியிருந்தது ரஸ்ஸிக்கு.

அப்போது டாட்டா குழுமத்தில் இணைந்து சற்றேறக்குறைய 15 ஆண்டுகள் ஆகியிருந்த ரத்தன் டாட்டா அவர்களின் விஸ்வரூபம் வெளிப்பட தருணம் அமைத்து கொடுத்த நிகழ்வுகள், முந்தைய பகுதியில் பார்த்த காலம், தான்  எழுதிய அட்டவணைக்கு ஏற்ப நடக்கிறதா என சரி பார்க்க ஆவலுடன் நோக்கிக்கொன்டிருந்தது.

பல பின் கதைகள், உபகதைகள், உள்வர்த்தமானங்கள், காரணிகள் சேர்ந்து உருவாக்கிய விளைவுகள் வெளிப்பட்ட தருணம்.

ரஸ்ஸி அவர்கள் டாட்டா குழுமத்தில் இணைந்த பொழுதுகளில் பிறந்தே இருக்காத, R.N. டாட்டா -  ரத்தன் நவல் டாட்டா என்ற முழுப்பெயர் கொன்ட ரத்தன் டாட்டா திரு. ஜே.ஆர்.டி அவர்களால் அடுத்த செயல் தலைவராக அறிவிக்க பெற்றார்.

ரத்தனின் வரவு ஒன்றும் ரஸ்ஸியால் அவ்வளவாக ரஸ்ஸிக்கப்படவில்லை!

எனெனில் அதுவரை காலமும் டாட்டா குழுமத்தில் இருந்த சேர்மன் மற்றும் செயல் மேலான் இயக்குனர் தலைவர் நிலை அதிகாரிகள் ஒரு பணியாளராக இல்லாமல் உடமையாளர்களாகவே திரு. ஜே.ஆர்.டி அவர்களால் நடத்தப்பட்டனர், தம்மை உணர்ந்தனர் அதேபோல் நடந்தும் கொன்டனர் - ‍எல்லாவகையிலும். இந்த எல்லா வகையிலும் என்பதில்தான் எத்தனை பரிமாணங்கள்?

அந்த நவம்பர் 1991 ல், ரஸ்ஸி ஒரு சுற்றறிக்கை மூலம், தன் கீழ் செயல் இயக்குனர்களாக பணியாற்றிய ஆதித்ய காஷ்யப் மற்றும் இஷாத் ஹுசைன் இருவருக்கும் முறையே இணை மேலான் இயக்குனர் மற்றும் துணை மேலான் இயக்குனர் என்று பதவி உயர்வு அறிவித்தார். இருந்த 6 செயல் இயக்குனர்களில் இவர்கள் இருவரும் மற்றவர்களை விட வயது, அனுபவத்தில் இளையவர்கள்.

பின்னிருத்தப்பட்ட மற்ற நால்வரின் கன்டணக்குரல்கள் ஒலிக்க ஆரம்பித்தது, சற்று பலமாகவே. அதன் எதிரொலிப்பும் பல நிலைகளில் ஒத்திசைவை உருவாக்கி ஆட்டம் காண்பித்தது.

(தொடரும்....)

தொடர்புடைய இடுகைகள் :

Russy Mody (ரஸ்சி மோடி அல்லது ரூசி மோடி) - 1

Russy Mody (ரஸ்சி மோடி அல்லது ரூசி மோடி) - 2

Russy Mody (ரஸ்சி மோடி அல்லது ரூசி மோடி) - 3 

Russy Mody (ரஸ்சி மோடி அல்லது ரூசி மோடி) - 4

Tuesday, 21 August 2012

நேர் கோணல்

Straight Wry
நேர்-கோணல்
நேர் எங்கிருக்கிறது?
கண்ணிலா?
காட்சியிலா?
காணும் பொருளிலா?...
இவை எல்லாவற்றையும் நேர் ஆக்கிரமித்து விட்டிருக்கிறது போலவே?

எனில் கோணல் மட்டும் எங்கு வாழ்கிறதாம்?
கண்டு உணரமுடியாப்பொருளிலா?

எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் நேர்கள் தங்களின் சுவாரஸ்யத்தை கூட்ட பெருங்கருணையோடு விட்டுவைத்த அபூர்வங்களில் வாழ்கிறது கோணல்...


ஆதலினால்
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் கோணல்கள் தங்களின் சுவாரஸ்யத்தை கூட்ட பெருங்கருணையோடு விட்டுவைத்த அபூர்வங்களில் வாழ்கிறது நேர்...

Framed


Framed

Naturally Framed.

Monday, 20 August 2012

பகிர்தலைப்பகிர்தல் - Sharing the sharing


Sharing
பகிர்தல்!இந்திய கண்டுபிடிப்பு
ஷேரிங்ங்ங்..... 

உங்க அம்மா சொல்லித்தர்ல?:-)

தொடர்புடைய இடுகைகள் :
அடுப்பூதும் ஃபேன்! 

இலையிடை காய்த்த கதிர்

இலையிடை காய்த்த கதிர்

மூங்கில் இலைமேலே 
தூங்கும் பனிநீரே
தூங்கும் பனிநீரை
வாங்கும் கதிரோனே

வாங்கும் கதிரோனை 
இடைமறிக்கும் கிளைகளே
இடைமறிக்கும் கிளைகளாய்
இதைக்கண்ட கண்களே

இதைக்கண்ட கண்களுள்
கண் கண்ட காட்சியே
தொடர்புடைய இடுகைகள் :


கண்டசுத்தி -#4 - அம்பிகாபதி

இலக்கியம் 

காட்சிபிழை திரை: காதலும் துரோகமும் விதியும் கண்ணதாசனும் 

கூடு விட்டு கூடு : - சுஜாதா தேசிகன் : ஒரு சொட்டு வைரம்

டோண்டு : படப்பிடிப்பில் டோண்டு ராகவன் அனுபவங்கள் - Tourism shoot 

Sunday, 19 August 2012

பாலம்


நகரும் நகரம், Bridge
நகரும் நகரம்
முடிவின்றி செல்லும் கோட்டின் மறுமுனை தேடும் மனித கண்களும்
முயன்று பார்த்து 'மூணு பத்து ரூபாய்' க்கு விற்று உணவு தேடும் நடைபாதை கடை முதலாளிகளும் கொண்டு

நகரும் நகரின்
சாலை கடக்கும் பாலம்

இது ஒரு தத்துவார்த்த சொல்லாகவே மனதரிகிறது....
அத்தனை பெரிய கடவுளையே சம்சார சாகரம் கடக்கும் பாலமென்றழைக்கும் நமக்கு
பாலத்தை பள்ளம் கடக்கும் கடவுளென்றழைப்பதில் என்ன சிக்கல் இருக்கமுடியும்

Wednesday, 15 August 2012

ஆழம்ஆழமா? உயரமா?


எதன் ஆழம் காட்டுதிந்த அளவை
தண்ணீரின் அடி ஆழமா?
மேலிருக்கும் வெளி ஆழமா?
காண்பவர் கண் ஆழமா?

கரையில் நின்றபடி வியந்திருந்த என்னிடம்

இவை ஏதுமில்லை,
உன் உள்மன பயத்தின் உயரம் காட்டுதென்றே
சொல்லிச்சென்றான் ஒரு பரிசல்காரன்

Sunday, 12 August 2012

நான் நான் நான்...வலைக்குள்


நான்..
நானறிவதே கடவுள்
நான் கடவுள்
நானும்தான் கடவுள்
நானழிந்தால் கடவுள்
நானில்லையேல் கடவுள்
ஆமாம் என்னதான் வேண்டுமிவர்களுக்கு
மாட்டிகொண்டிவர்களிடம்
படாதபாடு படுகிறேன் நான்

Russy Mody (ரஸ்சி மோடி அல்லது ரூசி மோடி) - 4

அப்ரண்டிஸாக சேர்ந்த ரஸ்சி விரைவிலேயே சக ஊழியர்களின் நன்மதிப்பை பெற்றார். இதில் அனைவரையும் கவர்ந்த விஷயம் அவரது அணுகுமுறை. ரஸ்சி அவர்களது மனிதர்களுடன் நேரிடையாக அணுகும் முறையானது அனைத்து நிலையிலும் உள்ள ஊழியர்களாலும் வரவேற்கப்பட்டது. அதே நேரத்தில் எந்த ஒரு கலவரமான சூழலிலும் துணிச்சலுடனும், நம்பிக்கையுடனும் அந்த மக்களிடையே சென்று பேசுவதில், சமாதானத்திற்கு பேச்சுவார்த்தை நடத்துவதில் அவருக்கு எந்த தயக்கமும் இருந்ததில்லை.

நாம் சிறிது யோசித்து பார்த்தால், அன்றைய நிலையில் ஜம்ஷெட்பூர் என்பது ஒரு நேரிடையான, பூச்சுகளில்லாத மக்களை, பாமரர்களை கொண்டது. எவ்வளவு நல்லவர்களோ அதே அளவு கோபமும் கொள்ளக் கூடியவர்கள். படிப்பறிவற்றவர்கள் அல்லது கொஞ்சம் படித்தவர்கள். அவர்களிடம் சென்று பேசுவதை ரஸ்சி தன் நிலைக்கு கௌரவக்குறைவானதாக என்றும் கருதியதில்லை.

இதே நேரத்தில், ரஸ்சி மிகவும் மேம்பட்ட ரசனைகளும், நல்ல உணவின் ரசிப்பும், வாழ்வின் மென்னுனர்வுகளின் பால் லயிப்பும் கொண்டவராக அறியப்பட்டிருந்தார். சமூகத்தில் மேல்மட்ட நிலை மனிதர்கள், அரச (ஆளும்) குடும்ப உறுப்பினர்கள் போன்றவர்களுடன் பழகும் அதே ரஸ்சியால் அதே வேளையில் சாதாரனர்களிடமும் எளிதாக சென்றடையக்கூடிய ஒருவராக இருக்க முடிந்தது. தொழிற்சாலைக்குள் பதினைந்து முட்டைகளினால் ஆனா ஆம்லேட் சாப்பிடக்கூடியவராகவும் அறியப்பட்டிருந்தார்!!!.

ஏனைய டாட்டா குழும நிறுவங்களுக்கு முன்னோடியான பல திட்டங்களை வடிவமைப்பதிலும், செயல்முறை படுத்துவதிலும் டிஸ்கோ சிறந்த பங்கு பணி ஆற்றியது. மேலும் டிஸ்கோ வின் நிறுவனத்தை சார்ந்துள்ள மற்றும் சுற்றியுள்ள சமுகத்தின் நலன் பேணும், முன்னேற்றும் பல செயல்கள், முன்னெடுப்புகள் நிறுவனத்தின் உள்ளார்ந்த மதிப்பீடுகளை அறிவதற்கும், நல்லபிப்ராயங்களை வளர்ப்பதிலும் உதவியது. இந்த முயற்சிகள் பலவற்றின் திட்டமிடல், செயல்பாடுகளின் பின்னிருந்த ரஸ்சிக்கும் நல்ல பெயர்.

இவை அனைத்தும் சேர்ந்து, ரஸ்சியினை  டிஸ்கோ நிறுவன பணி நிலை முன்னேற்றபாதையில் விரைந்து பயணிக்க வைத்து சேர்மன் மற்றும் செயல் தலைவர் பொறுப்பிற்கு உயர்த்தியது. அடுத்த பத்தாண்டுகளுக்கான டிஸ்கோ வின் முன்னேற்றத்தில் மற்றுமொரு படி.

அதனோடு கூட காலம் தன்பாட்டுக்கு அது ஒரு கணக்கினை போட்டு சுற்றி சுழண்டடிக்கப்போகும் ஒரு சூறாவளியுடன் கூடிய நிகழ்வுக்கு அட்டவணை எழுதிவிட்டு வேடிக்கை பார்க்க காத்துக்கொண்டிருந்தது!

(தொடரும்....)


தொடர்புடைய இடுகைகள் :

Russy Mody (ரஸ்சி மோடி அல்லது ரூசி மோடி) - 1

Russy Mody (ரஸ்சி மோடி அல்லது ரூசி மோடி) - 2

Russy Mody (ரஸ்சி மோடி அல்லது ரூசி மோடி) - 3

Saturday, 4 August 2012

"Roundaana"? - ரவுண்டானா....!!!?? - 1"Roundaanaa" - ரவுண்டானா....!!!??


ரவுண்டானா....!!!??
இது எந்த மொழிச்சொல்லாக இருக்கக்கூடும்?
சாலை நடுவில் நிற்கும் கணித வடிவம்,
இதில் தான் எத்தனை வகை….

காரை இட்டது
கார் இடித்து பேர்ந்தது
கட்சி கொடி தோரணம் கட்டியது
பச்சை போர்த்தது
கம்பி வேலி இட்டது
எருமை உராய்வது
நாய் உறைவது
ஆடு தாண்டுவது
நீரூற்று கொண்டது
நின்ற நெடுமரம் கொண்டது
அமர்ந்தருளும் கடவுள் கொண்டது
கூவி அழைக்கும் விளம்பர தட்டி கொண்டது
குற்றேவல் புரிவோர் குடியிருக்கும் குடிசை கொண்டது
காவலர் குடை மட்டும் கொண்டது
தமிழில் இதன் பெயரறிவது இப்போது மிகவும் அவசியமாகிறது
அறிந்தவர் யாரேனும் இதைக் கடந்து செல்லும்வேளை 
ஒருகணம் செலவிட்டு சொல்லிவிட்டு போங்களேன்

ஏனென்றால்
எந்த வடிவிலிருந்தாலும் இதன் பெயர் ரவுண்டானா என்பதாக மட்டுமே
இதுவரை வழங்கப்பட்டு வருகிறதென்பது
ஏதாவதொரு  சாமியார் அல்லது மேலாண்மை குருவின் கண்ணில் பட்டு
தத்துவக்கருப்பொருள் ஆகக்கூடிய சாத்தியங்கள் கொண்டது

அந்த நேரம் இதற்கோர் தமிழ்ப் பெயரின்றிப் போனால்
நான்தான் என்ன செய்வது கவிதை எழுத?

Automation? or Jugaad? or Innovation? or Ingenuity?!! - அடுப்பூதும் ஃபேன்!
Automation? or Jugaad? or Innovation? or Ingenuity?!! - அடுப்பூதும் ஃபேன்!
Automation? or Jugaad? or Innovation? or Ingenuity?!! - அடுப்பூதும் ஃபேன்!


அடுப்பூதும் பெண் அந்தக்காலம், அடுப்பூதும்  ஃபேன் இப்போது!

Wednesday, 1 August 2012

Boat Rest! (ஓய்வெடுக்கும் ஓடம்!)

Boat Rest!

ஓய்வெடுக்கும் ஓடம்!

தண்ணீரில் மிதக்கும் ஓடம் தரையில் ஓய்வெடுக்கிறது,
இந்த ஆற்றின் கரைவழிப்படியிறங்கி தண்ணீர் தொட்டு பயணம் போக காத்திருக்கிறது.
யார் கண்டது ஓடம் என்பதால் தரையில் ஓடிப்  பார்த்து தன் பெயர்க்காரணம் கண்டுபிடிக்கக்கூட முயற்சிக்கலாம்.